அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (6) காலை மன்ன...
அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (6) காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும்,சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர பிரதேச செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் முன்னாள் உதவி கல்வி பணிப்பாளர் ராபி அஸ்லம்,கல்வி அபிவிருத்திக்குழு காப்பாளர் நடராசா சச்சிதானந்தன்,மன்னார் வலய ஆசிரிய ஆலோசகர் அன்ரன் ரமேஷ்,மன்னார் நகர சபையின் செயலாளர் எஸ். லோகேஸ்வரன், கௌரவ விருந்தினர்களாக மன்னார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் ரெவல்,முருங்கன் விகாராதிபதி வல்பொல சரண தேரர்,உப்புக்குளம் ஜும்மா பள்ளி மௌலவி ஜனாப் ஏ.சீமாக், நானாட்டான் செல்வமுத்து மாரியம்மன் ஆலய குரு எஸ்.கனகராஜா குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது இருநூறுக்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், நீண்டகால சேவையாற்றிய முன்பள்ளி ஆசிரியர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,,,
“சிறுகுழந்தைகளைக் கையாள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. முன்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளை மிகவும் கவனமாகப் பராமரித்து கல்வி புகட்டுபவர்கள்.அவ்வாறான மகத்துவமான வேலையைச் செய்கின்ற அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். ஆனால் மிக நீண்டகாலமாக நிந்தர நியமனத்துக்காகப் போராடியும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்கின்ற போதிலும் மிகக்குறைவான ஊதியத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.”
“நீண்டகாலமாக ஆசிரிய சேவையாற்றி இறுதிவரை அங்கீகாரம் கிடைக்காமலே பல முன்பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள்.
எனவே இந்த நிலை மாறவேண்டும். எத்தனை உயர்கல்வி கற்று வந்தாலும் சிறுவயதில் கற்பித்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை யாரும் இலகுவில் மறப்பதில்லை.
அவ்வாறான ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க நாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்தப் புதிய அரசாங்கம் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.”
No comments