இந்தியாவின் அதானி குழுமத்தை உள்ளடக்கிய மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டத்தை மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சட்டமா அதிபர், உய...
இந்தியாவின் அதானி குழுமத்தை உள்ளடக்கிய மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டத்தை மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை, இந்த திட்டத்தை மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் அவந்தி பெரேரா உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
எனினும், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் உரிய தீர்மானம் எடுக்கும் வரை திட்டம் தொடர்பான தற்போதைய நிலையைப் பேணுவதற்கும் சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார்.மன்னார் தீவில் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையத்தை மேற்கொள்வதற்காக அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீ லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் சுற்றுச்சூழல் நீதிக்கான வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் உட்பட ஐந்து மனுதாரர்கள் இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் இன்று நீதிமன்றில் ஆராயப்பட்டபோதே, சட்டமா அதிபர், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மன்றில் அறிவித்துள்ளார்.கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
இந்தநிலையில், நீதியரசர்களான எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ், சிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழு, 2025ஆம் ஆண்டு மார்ச் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் குறித்த மனுக்களை மீண்டும் அழைக்க தீர்மானித்தது.
அத்துடன், மனுக்களுடன் தொடர்புடைய ஆவணங்களை 2025 ஜனவரி 31க்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் மன்று, சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.
அதானியின் காற்றாலைத் திட்டம், மூன்று பாதுகாக்கப்பட்ட பகுதிகளால் சூழப்பட்ட மையத்தில் இருப்பதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எடம்ஸ் பாலம் கடல் தேசிய பூங்கா, விடத்தல்தீவு இயற்கை காப்பகம் மற்றும் வான்கலை சரணாலயம் ஆகிய இந்த மூன்று இடங்களும், வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் வரும் பாதுகாக்கப்பட்ட தளங்களாகும்.
அத்துடன், இந்த பூங்காக்கள் பல்லுயிர்கள் உட்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
எனவே, மன்னார் தீவில் இந்த திட்டத்தை அமுல்படுத்துவது, பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பாரிய அளவிலான பாதிப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments