அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ச...
அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (29) மன்னார், தாராபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் எம்.பி.க்கள் 80 பேர் போட்டியிடவில்லை. வெல்ல முடியாது எனக் கருதியே இவர்கள் ஒதுங்கியுள்ளனர். அதேபோன்று, போட்டியிடும் இன்னும் சிலரை மக்கள் இம்முறை தோற்கடிக்கவும் தீர்மானித்துள்ளனர்.
அரசியலில் நிலைப்பதற்காக வக்கிரபுத்தியுடன் செயற்படும் மஸ்தான் போன்றவர்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். தாராபுரம் மண்ணின் பெருமைக்கே இழுக்கு ஏற்படும் வகையில், இவரது செயற்பாடுகள் இருந்தன. எனது சசோதரர் ரியாஜ் பதியுதீனை சிறையிலடைப்பதற்கு, கோட்டாவின் இனவாத எம்.பி.க்களுடன் சேர்ந்து மஸ்தானும் ஒப்பமிட்டார். நான், சிறையிலிருந்தபோது, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என அடிக்கடி சோதனையிட்டனர். இறைவனின் நாட்டத்தால் என்னை கொரோனா தொற்றவில்லை. இல்லாவிட்டால், என்னை எங்கோ இழுத்துக்கொண்டு தொலைத்துவிடவே ராஜபக்ஷக்களுடன் சேர்ந்து இனவாதிகள் முயற்சித்தனர். இதற்கு உடந்தையாகச் செயற்பட்டவர்தான் இந்த மஸ்தான்.
நமது பிள்ளைகள் படிப்பதற்காக பாடசாலைகளுக்கு பல கட்டடங்களை கொண்டுவந்த வேளை, ரணிலின் செயலாளரிடம் சென்று, அந்தக் கட்டடங்களைக் கட்டவிடாமல் தடை விதித்தார். இந்த அபிவிருத்திகள் இங்கு நடந்தால், ரிஷாட்டின் அரசியல் பலமடையும் எனப் பயந்தவர்தான் இவர். அரசியலுக்காக பிள்ளைகளுக்கு வரும் அபிவிருத்திகளை தடுத்துவிடாதீர்கள். இயலுமானால், நீங்களும் பாடசாலைகளுக்கான அபிவிருத்தியைக் கொண்டுவாருங்கள் என ரணிலின் செயலாளர், அவருக்கு அறிவுறுத்தியிருந்தார். இவற்றையெல்லாம் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதனாலேயே கூறுகின்றேன்.
வன்னி மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாத்தவாறே நான் செயற்படுகின்றேன். இறைவனின் உதவியால், நமது கட்சி இந்த வன்னி மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைப் பெறுவதற்கான களநிலவரங்கள் கனிந்து வருகின்றன. அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் ஆசனங்களை வெல்லும் நிலைமைகளே ஏற்பட்டுள்ளன. இவ்வாறு நிகழ்ந்தால், சிறுபான்மைக் கட்சிகளுக்குள் அதிக பலமுள்ள கட்சியாக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும்” என்று அவர் கூறியுள்ளார்.
No comments