Page Nav

HIDE

Breaking News:

latest

மனித நேயமே இல்லாத இந்த நாட்டிலே மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை-

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(10) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீ...

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(10) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இடம் பெற்றது.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படத்தை ஏந்தியவாறு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் தினம் எதற்காக நினைவு கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

மனித நேயமே இல்லாத இந்த நாட்டிலே மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என தெரிவித்தனர்.

கடந்த 15 வருட காலங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்க நாங்கள் வீதியில் நிற்கின்றோம்.உலக நாடுகள் என்றாலும் சரி,சர்வதேச நாடுகள் என்றாலும் சரி எமது நாடாக இருந்தாலும் சரி எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எவ்வித பிரயோசனமும் இல்லாமல் ஒவ்வொரு அம்மாக்களும் மன வேதனையுடன் உள்ளனர்.இன்று நூற்றுக்கணக்கான அம்மாக்கள் உயிரிழந்துள்ளனர்.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கொண்டிக்கின்றவர்கள் தற்போது குறைவானவர்களாகவே இருக்கின்றோம்.

இருக்கிறவர்களும் இறப்பதற்கு முன்னர் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் உறவுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

மனித உரிமைகள் அமைப்புக்கள் பல இருந்தும் என்ன பலன்? என்ற கேள்வியை எழுப்பினர்.எத்தனை மனித உரிமைகள் அமைப்புக்கள் இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் செயல்பாடுகள் இல்லை.

எங்களுக்காக கதைப்பதற்கும் ஒருவரும் இல்லை என தெரிவித்தனர்.இந்த நிலையிலே சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கருப்பு தினமாக அனுஸ்ரிக்கின்றோம்.என    மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

hill