Page Nav

HIDE

Breaking News:

latest

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நெடுந்தீவுக்கு விஜயம்-பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு.

வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை இன்று புதன்கிழமை (05) பார்...



வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை இன்று புதன்கிழமை (05) பார்வையிட்டதுடன்,நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

 
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்கு கொள்வதற்காக ஆளுநர் நெடுந்தீவு குச் சென்றிருந்தார். 

இதன்போது மாவிலித்துறை – பெரியதுரை வீதியில் ஒரு பகுதி திருத்தம் செய்யப்பட்ட நிலையில் எஞ்சிய பகுதி மிகமோசமாக பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.
 
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலும், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வீதி அபிவிருத்தி திட்டத்திலும், சுற்றுலா அதிகார சபையின் நிதி உதவியின் கீழும் அந்த வீதி முழுமையாக திருத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எந்திரி.வ.ஜெகானந்தன் ஆளுநரிடம் தெரிவித்தார். 

வீதிப் போக்குவரத்து இடையூறாக அமைந்துள்ள பற்றைகளை அகற்ற உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
 
கடந்த காலத்தில் சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் திட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பனம் கள் போத்தலில் அடைக்கும் நிலையத்தையும் ஆளுநர் பார்வையிட்டார். மது வரி அனுமதி பத்திரம் கிடைக்க பெறாமையால் போத்தலில் அடைக்கும் நிலையத்தின் பணி தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலைமை இருப்பது ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை, நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை, நெடுந்தீவு மகா வித்தியாலயம் என்பவற்றையும் ஆளுநர் பார்வையிட்டார். 

பாடசாலைகளின் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தெரியப்படுத்தினார்.

 அதேபோன்று ஏனைய பாடசாலைகளின் கட்டிடங்களின் திருத்த வேலைக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வும் அவர் குறிப்பிட்டார். ஆசிரிய விடுதிகள் அமைப்பதற்குப் பதிலாக, நெடுந்தீவிலுள்ள வீடுகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் பயன்படுத்துவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
 
இதேவேளை, நெடுந்தீவிலுள்ள கால்நடை வைத்திய அதிகாரி பணி மனையில் வைத்து, மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடையில் கோழி வளர்ப்புக்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு வழங்கும் நிகழ்விலும் ஆளுநர் கலந்து கொண்டார். 

அத்துடன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சால் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்விலும் ஆளுநர் பங்கேற்றார்.
 
நெடுந்தீவில் மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை புதிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் எனக்கோரி அந்தப் பிரதேச மக்கள் ஆளுநரை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வைத்துச் சந்தித்து முறையிட்டனர். அவ்வாறானதொரு நிலைப்பாட்டிலேயே உள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் இந்த பயணத்தின் போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் உட்பட வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் இணைந்திருந்தனர்.

No comments

hill